ராஜ்கோட்: விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்,'' என, பரோடா அணி கேப்டன் யூசுப் பதான் தெரிவித்தார்.
இந்திய அணியின் 'ஆல்–ரவுண்டர்' யூசுப் பதான், 31. இதுவரை 57 ஒருநாள் (810 ரன்கள், 33 விக்கெட்), 22 சர்வதேச 'டுவென்டி–20' (236 ரன்கள், 13 விக்கெட்) போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2012க்கு பின் தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். தற்போது இவர், விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மேற்கு மண்டல பிரிவில் பரோடா அணியின் கேப்டனாக உள்ளார். ராஜ்கோட்டில் இன்று பரோடா அணி, மும்பை அணியை சந்திக்கிறது.
இதுகுறித்து யூசுப் பதான் கூறியது: தற்போது எனது கவனம் முழுவதும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் உள்ளது. இதில் திறமையை வௌிப்படுத்தும் பட்சத்தில், விரைவில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெறலாம். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். விஜய் ஹசாரே தொடருக்கான இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவேன் என நம்புகிறேன். மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டி முக்கியமானது. தொடரை வெற்றியுடன் துவக்கும் பட்சத்தில், அடுத்து வரும் போட்டிகளுக்கு உற்சாகம் அளிக்கும். எங்கள் பரோடா அணியில் திறமையைான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இன்றைய போட்டியில் விளையாட இர்பான் பதான் தயாராக உள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,), காயத்தில் இருந்து மீண்டு வரும் பயிற்சி மேற்கொண்ட இவர், இன்று பந்துவீச காத்திருக்கிறார்.
இவ்வாறு யூசுப் பதான் கூறினார்.

No comments:
Post a Comment