பதுல்லா: ஆசிய கோப்பை லீக் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. துாணாக நின்று சதம் அடித்த சங்ககரா, இலங்கை அணிக்கு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய இந்திய வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் வீணானது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இலங்கை அணியில் சுரங்கா லக்மலுக்கு பதிலாக அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
தவான் அபாரம்:
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (13) மோசமான துவக்கம் கொடுத்தார். பின் ஷிகர் தவான், கேப்டன் விராத் கோஹ்லி சேர்ந்து அசத்தலாக ஆடினர். மலிங்கா வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த தவான், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த போது, அஜந்தா மெண்டிஸ் 'சுழலில்' கோஹ்லி (48) போல்டானார்.
அடுத்து வந்த ரகானே (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அசத்திய தவான், திசாரா பெரேரா வீசிய 26வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அபாரமாக ஆடிய இவர் (94), மெண்டிஸ் பந்தில் போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 'மிடில்–ஆர்டர்' ஏமாற்றம்:
இதற்கு பின் வந்தவர்கள் சொதப்பினர். தினேஷ் கார்த்திக் (4), அம்பதி ராயுடு (18) சொற்ப ரன்னில் வெளியேறினர். ஸ்டூவர்ட் பின்னி 'டக்–அவுட்' ஆனார். மலிங்கா 'வேகத்தில்' அஷ்வின் (18) நடையை கட்டினார். புவனேஷ்வர் குமார் (0), மெண்டிஸ் பந்தில் அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா, ஒரே ஒரு சிக்சர் மட்டும் அடித்தார். மெண்டிஸ் பந்தில் இரண்டு சிக்சர் விளாசிய முகமது ஷமி ஆறுதல் தந்தார்.
இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (22), முகமது ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 4, சேனநாயகே 3 விக்கெட் கைப்பற்றினர்.
குசால் அரைசதம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமன்னே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய 6வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த திரிமன்னே, அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது அஷ்வின் பந்தில் திரிமன்னே (38) அவுட்டானார். முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த குசால் பெரேரா, ஒருநாள் அரங்கில் தனது 3வது அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்கள் எடுத்த போது அஷ்வினிடம் சரணடைந்தார்.'ஹாட்ரிக்' நழுவல்:ஆட்டத்தின் 32வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா 'இரட்டை அடி' கொடுத்தார். இந்த ஓவரின் முதலிரண்டு பந்தில் ஜெயவர்தனா (9), சண்டிமால் (0) அடுத்தடுத்து அவுட்டானார்கள். மூன்றாவது பந்தில் கேப்டன் மாத்யூஸ் 2 ரன்கள் எடுக்க, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. பின், முகமது ஷமி 'வேகத்தில்' மாத்யூஸ் (6) பெவிலியன் திரும்பினார்.
சங்ககரா சதம்:
அடுத்து வந்த சேனநாயகே (12), சதுரங்கா டி சில்வா (9) நிலைக்கவில்லை. இதையடுத்து இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அபாரமாக ஆடிய சங்ககரா போட்டியை மீண்டும் இலங்கை வசம் கொண்டு வந்தார். முகமது ஷமி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், ஒருநாள் அரங்கில் தனது 18வது சதத்தை பதிவு செய்தார். இவர், 84 பந்தில் 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் இணைந்த திசாரா பெரேரா, அஜந்தா மெண்டிஸ் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இலங்கை அணி 49.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திசாரா பெரேரா (11), மெண்டிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலா 3, அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.ஆட்டநாயகன் விருதை இலங்கையின் சங்ககரா வென்றார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் 'பரம எதிரி'யான பாகிஸ்தானை நாளை சந்திக்கிறது. பைனல் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்திய அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
கோஹ்லி சாதனை
நேற்று 48 ரன்கள் எடுத்த கோஹ்லி, 125 இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை (5588 ரன்கள்) பின்னுக்குதள்ளி புதிய சாதனை படைத்தார். இதுவரை கோஹ்லி 125 இன்னிங்சில் 5629 ரன்கள் எடுத்துள்ளார்.
* ஓய்வில்லாமல் விளையாடி வரும் விராத் கோஹ்லி, தொடர்ந்து 100வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதன்மூலம் சச்சின் (185 போட்டிகள்), அசாருதின் (126) ஆகியோருக்கு பின் இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். கோஹ்லி ஒட்டுமொத்தமாக 132 போட்டிகளில் 5629 ரன்கள் எடுத்துள்ளார்.
அஷ்வின் '100'
நேற்று, இலங்கையின் திரிமன்னே, குசால் பெரேராவை அவுட்டாக்கிய இந்தியாவின் அஷ்வின், ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 17வது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர், 77 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் அனில் கும்ளே (334 விக்கெட்), ஜவகல் ஸ்ரீநாத் (315), அஜித் அகார்கர் (288) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

No comments:
Post a Comment