மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே 108 நாதஸ்வரங்கள், 108 தவில்களைக் கொண்டு நடத்தப்படும் 24 மணி நேர நாதஸ்வர இசை விழா வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவன்று திருவண்ணாமலை கிரிவல நாதஸ்வர தவில் இசை சங்கம் சார்பில் 24 மணி நேர நாதஸ்வர இசை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான இசை விழா வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கியது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள உண்ணாமுலையம்மன் தேர் அருகே நடைபெறும் இவ்விழாவை கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தனுசு தொடங்கி வைத்தார். இதையடுத்து 108 நாதஸ்வரங்கள், 108 தவில்களைக் கொண்டு இசை விழா நடத்தப்பட்டு வருகிறது.
குளத்தில் வாசிப்பு:
இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை 108 நாதஸ்வர வித்வான்கள், 108 தவில் வித்வான்கள் ஒன்று சேர்ந்து கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சர்க்கரை தீர்த்தக் குளத்தில் இறங்கி சுமார் 20 நிமிடங்களாக கச்சேரி நடத்தினர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு, மகிழ்ந்தனர்.
இதன்பிறகு, அம்மன் தேர் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்து வித்வான்கள் தங்களின் இசை விழாவைத் தொடங்கினர்.இவ்விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) காலை 6 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரமும் நடத்தப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வர தவில் இசைச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment