பதுல்லா: ஆசிய கோப்பை தொடரில், 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், உமர் அக்மல் சதம் அடித்து கைகொடுக்க, 72 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
வங்கதேசத்தில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 3வது லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான், அறிமுக ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.அக்மல் அபாரம்:
பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜீல் கான், அகமது ஷேசாத் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த போது ஷார்ஜீ்ல் கான் (25) அவுட்டானார். முகமது ஹபீஸ் (10) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் அகமது ஷேசாத், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். இவர், 50 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். ஒரு பந்தை கூட சந்திக்காத கேப்டன் மிஸ்பா (0) 'ரன்–அவுட்' ஆனார். அடுத்து வந்த சோகைப் மக்சுத் (13), அப்ரிதி (6) சொற்ப ரன்னில் வௌியேறினர். அன்வர் அலி (21), உமர் குல் (15) நிலைக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் தனிநபராக போராடிய உமர் அக்மல், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பதம்பார்த்தார். தாவ்லத் ஜத்ரன் வீசிய 50வது ஓவரில், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய உமர் அக்மல், ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்தது. உமர் அக்மல் (102), சயீத் அஜ்மல் (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் தாவ்லத் ஜத்ரன், மிர்வைஸ் அஷ்ரப், சமியுல்லா ஷென்வாரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.அசத்தல் பந்துவீச்சு:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷாசத் (9) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய நுார் அலி ஜத்ரன் (44), அஜ்மல் 'சுழலில்' சிக்கினார். பின் இணைந்த அஸ்ஹர் ஸ்டானிக்ஜாய், நவ்ரோஸ் மங்கல் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது ஸ்டானிக்ஜாய் (40), அப்ரிதியிடம் சரணடைந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த நவ்ரோஸ் மங்கல் (35) 'ரன்–அவுட்' ஆனார்.
அடுத்து வந்த நஜிபுல்லா ஜத்ரன் (1), கேப்டன் முகமது நபி (15), மிர்வைஸ் அஷ்ரப் (4), தாவ்லத் ஜத்ரன் (0), ஷபூர் ஜத்ரன் (0), சமியுல்லா ஷென்வாரி (14) சொற்ப ரன்களில் வௌியேறினர்.
ஆப்கானிஸ்தான் அணி 47.2 ஓவரில் 176 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஹபீஸ் 3, சயீத் அஜ்மல், உமர் குல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிறந்த வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் அணிக்கு (5 புள்ளி), கூடுதலாக ஒரு போனஸ் புள்ளி வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் உமர் அக்மல் வென்றார்.

No comments:
Post a Comment