சிறுசேரியில் பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலையுண்ட விவகாரம் : 4 பேர் சிக்கினர்
சென்னை: சென்னை அருகே சிறுசேரியில் பெண் மென்பொறியாளர் உமா மகேஸ்வரி கொலையுண்ட விவகாரத்தில், 4 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் பிடித்துள்ளனர். சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உமாமகேஸ்வரி மர்மமான முறையில் கொலையுண்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை நடந்த இடத்தில் சில முக்கிய தடயங்களை சேகரித்துள்ள அவர்கள், அதனடிப்படையில் சிலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் சிபிசிஐடி போலீஸார் 4 பேரை பிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனித்தனி இடங்களில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவர் உமாமகேஸ்வரியிடம் கடைசியாக கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியவர் என்று கூறப்படுகிறது.

இதுதவிர உமாமகேஸ்வரி காணாமல் போன அன்றிரவு அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற நபர்களும் சிபிசிஐடி பிடியில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிவிக்க சிபிசிஐடி போலீஸார் மறுத்துவிட்டனர். இதற்கிடையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள சிப்காட் வளாகத்தின் அவலநிலையை கண்டித்து ஐடி நிறுவன பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு போலீஸ் பூத் அமைப்பது, சிசிடிவி நிறுவுவது, புதர்களை அகற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட போலீஸாரும், சிப்காட் நிறுவன ஊழியர்களும் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment