சென்னை : கடைகளில், பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு, தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்ப்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.அகிலா என்பவர், தாக்கல் செய்த மனு: சென்னையில், கடைகள், வணிக நிறுவனங்களில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும், தடை விதித்தது. பிளாஸ்டிக் பைகளை பூமிக்குள் புதைப்பதன் மூலம், மழை நீர், நிலத்தின் அடிப்பகுதிக்கு செல்வது தடுக்கப்படுகிறது.
சில்லரை வியாபாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். 10 ரூபாய், 20 ரூபாய் என, பிளாஸ்டிக் பைகளை விற்கின்றனர். பிளாஸ்டிக் பைகள், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது, அரசுக்கும், மாநகராட்சிக்கும் தெரியும். இருந்தும், அதை தடுக்கவில்லை. எனவே, பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதற்கு, முழுமையான தடை விதிக்க வேண்டும். விற்பனை செய்வதை தடுக்கவும், விற்பனையாளர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி சசிதரன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜரானார்.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கும், மாநகராட்சிக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

No comments:
Post a Comment