ஆசிய கோப்பையில் வாழ்வா சாவா? ஆட்டம்

தாக்கா: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் இந்திய அணி இன்று மோதுகிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியில் கோஹ்லிகோ சிக்கியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.'ரவுண்ட் ராபின்' லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. இந்த சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மார்ச் 8ம் தேதி இறுதிப் போட்டியில் மோத உள்ளன.முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, அடுத்து இலங்கையுடன் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்ற நிலையில், அடுத்து ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் போனஸ் புள்ளியுடன் வென்று 5 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தியா 4 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது.பலம் வாய்ந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி 8 புள்ளிகளுடன் முன்னிலை வகிப்பதால், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை உறுதி செய்துகொண்டுள்ளது. இந்த நிலையில், பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்றைய லீக் ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேற முடியும் என்பதால் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையுடன் நடந்த போட்டியில் தவான், கோஹ்லி சிறப்பாக பேட் செய்த நிலையில் நடு வரிசை வீரர்கள் ராயுடு, கார்த்திக், பின்னி ஆகியோர் சொதப்பியது ரன் குவிப்பை வெகுவாக பாதித்தது. பீல்டிங்கின்போது இந்திய வீரர்கள் 4 கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. விக்கெட் கீப்பர் கார்த்திக்கும் தன் பங்குக்கு ஒரு எளிய ஸ்டம்பிங் வாய்ப்பை வீணடித்தார்.ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி ஏமாற்றமளித்த நிலையில், 3வது ஸ்பின்னராக அமித் மிஷ்ராவை சேர்ப்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. நடுவரிசைக்கு வலு சேர்க்கும் வகையில் புஜாராவுக்கு வாய்ப்பு அளிப்பதும் அவசியம். மொத்தத்தில், எல்லா வகையிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாக். அணியின் சவாலை முறியடிக்க முடியும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உமர் குல் அபாரமாக விளையாடி சதம் அடித்ததால், பாகிஸ்தான் ஓரளவு உற்சாகமாகவே உள்ளது. பந்துவீச்சே அந்த அணியின் முக்கிய பலம் என்பதில் சந்தேகமில்லை. உமர் குல், ஜுனைத் கான் வேகமும், அஜ்மல்

-அப்ரிடி சுழல் கூட்டணியும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும். கேப்டன் மிஸ்பா, ஷர்ஜீல் கான், ஹபீஸ், உமர் அக்மல், அப்ரிடி ஆகியோரின் அதிரடியை கட்டுப்படுத்துவதும் அவசியம். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. இது அரை இறுதி நாக் அவுட் ஆட்டமாகவே அமைந்துவிட்டதால், இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்து கட்டுகின்றன. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30க்கு தொடங்கும் போட்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிடி சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், அஜிங்க்யா ரகானே, அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், செதேஷ்வர் புஜாரா, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஷ்ரா, ஈஷ்வர் பாண்டே.

பாகிஸ்தான்: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அப்துர் ரகுமான், அகமது ஷெஷாத், அன்வர் அலி, பிலவால் பட்டி, பவாத் ஆலம், ஜுனைத் கான், முகமது ஹபீஸ், முகமது தல்ஹா, சயீத் அஜ்மல், ஷாகித் அப்ரிடி, ஷர்ஜீல் கான், ஷோயிப் மக்சூட், உமர் அக்மல் (விக்கெட் கீப்பர்), உமர் குல்.

No comments:

Post a Comment