வங்கதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் கடைசி நேரத்தில் வீழ்ந்தது. இதனால், இந்த தொடரிலும் இந்திய அணியின் பைனல் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:
இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வித இலக்கும் இல்லாமல் உள்ளது. இதனால் அடுத்தடுத்து படுமோசமான தோல்விகள் கிடைக்கின்றன. இவர்களின் பயிற்சி முறைகள் ஒன்றுமே சரியில்லை.
விருப்பம் போல பயிற்சி செய்கின்றனர். விராத் கோஹ்லி, ஷிகர் தவான் தவிர, மற்றவர்கள் பயிற்சியை புறக்கணித்ததை மன்னிக்கவே முடியாது.
சமீபகாலமாக பாகிஸ்தான் அணி 250 ரன்களுக்கும் மேலான இலக்கை 'சேஸ்' செய்ய முடியாமல் தோற்கிறது. இதற்கு ஏற்றார் போல இந்திய வீரர்கள் ரன்குவிப்பை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால், மிதமிஞ்சிய நம்பிக்கையில் தேவையில்லாத 'ஷாட்களை' அடித்து, விக்கெட்டுகளை பறிகொடுத்து திரும்பினர். ஷேர்– இ– பங்களா மைதானத்தின் பவுண்டரி அளவு குறைவாக இருந்ததால், சிக்சர்கள் மிக எளிதாக அடிக்கப்பட்டன.
ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரில், முதன் முறையாக கேப்டனாக களமிறங்கிய கோஹ்லி, சிறப்பான முறையில் தான் செயல்பட்டார். ஏனெனில், இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில், கடைசி ஓவரில் தான் தோல்வி கிடைத்தது.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
'அப்ரிதியை திட்டாதீர்'
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு 'ஜாம்பவான்' அப்துல் காதிர் கூறுகையில்,'' அப்ரிதி எப்போதுமே பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் அசத்தும் 'த்ரீ இன் ஒன்' வீரர். இவர் தேவையில்லாத விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி தேடித்தந்ததால், இனிமேல் இவரை திட்டக்கூடாது. 2015 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு அப்ரிதி கேப்டனாக இருக்க வேண்டும்,'' என்றார்.

No comments:
Post a Comment