மதுரைக்கு தேவையான குடிநீருக்கு பற்றாக்குறை : 30 நாட்களுக்கான நீர் கையிருப்பு

மதுரை : வைகை அணை வறண்டு வருவதால் 30 நாட்களுக்கு மட்டுமே மதுரை மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும். லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால், நீர் தேவைக்காக, மாநகராட்சியின் புதிய முயற்சியான 500 போர்வெல்கள் அமைக்கும் பணியும் நடக்க வாய்ப்பில்லை. குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படும் அவலம் உள்ளது.
மதுரையில் 2012-2013 பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டன. மதுரைக்கு வைகை அணையில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. அணையின் உயரம் 72 அடி. தற்போது வெறும் 33.32 அடி நீர் தான் உள்ளது. அதில் 23 அடி வரை சேறும், சகதியுமாக உள்ளது. மீதமுள்ள 10 அடி வரையுள்ள தண்ணீரை தான் குடிநீருக்கு எடுக்க முடியும்.
நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மாநகராட்சி எல்லைக்குள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது கடும் வறட்சி நிலவுவதால், நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சில பகுதிகளுக்கு அந்த குடிநீரும் கிடைப்பதில்லை. ஓரிரு பகுதிகளில் குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர்.தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய ௨ கோடியே 69 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் மண்டலத்துக்கு 125 வீதம் 500 போர்வெல் அமைக்க 13 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 16 கோடியே 57 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகத்திற்காக 6 ஆயிரம் மற்றும் 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் மாதம் ஒன்றுக்கு 1,240 நடைகள் சுமார் 100 லாரிகளில் (ஒரு வார்டிற்கு ஒரு லாரி) வினியோகம் செய்யப்படவுள்ளது. வைகை அணையில் வெறும் 10 அடி நீர் மட்டுமே இன்னும் 30 நாட்களுக்கு எடுக்க முடியும். லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க முடியுமா, என்பது சந்தேகமே.
வெறும் காற்று தான் வரும்: மதுரையின் நீராதாரமான செல்லுார், வண்டியூர், மாடக்குளம், தென்கால், பறவை, துவரி மான் கண்மாய்களை துார்வாரி, துார்ந்து போன கால்வாய்களை சரிசெய்ய பொதுப்பணித்துறை,மாநகராட்சி ஆர்வம் காட்டவில்லை. பல கோடி ரூபாயை கொட்டி 500 போர்வெல் அமைத்து தண்ணீர் வினியோகிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நிலத்தடி நீர் அதல, பாதாளத்திற்கு சென்ற நிலையில், 500 அடியில் போர்வெல் அமைத்தாலும், அதில் தண்ணீர் வரவேண்டும். தண்ணீருக்கு பதில் காற்று வர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதனால், மாநகராட்சி அதிகாரிகளின் 'மாமூல்' வாழ்க்கை பாதிக்காது. ஆனால் பாதிப்பு
மக்களுக்கு தான்.

No comments:

Post a Comment